Friday, May 20, 2011

ஷேக்ஸ்பியர் எனும் மகா கவி. (தோன்றிற் புகழோடு தோன்றுக - அக்திலார் தோன்றலில் தோன்றாமை நன்று )


இன்று நாம் கண்டு வியக்கக் கூடிய எத்தனயோ மாமேதைகளின் ஆரம்ப கால வாழ்க்கை மிக மிக சாதரணமானது தான்.அதுவும் வியக்கத் தகு அளவில் சாதாரணமானது. கற்றவன் மட்டும் மாமேதையல்ல என உணர்த்திய மாமேதைகளுக்கு  சிறந்த உதாரணங்கள் மகாகவி பாரதி, புதுமை பித்தன், கண்ணதாசன் போன்றோர். இவர்களிற்கு  ஷேக்ஸ்பியரும் ஒன்றும் சளைத்தவரல்ல.ஷேக்ஸ்பியர் இன் கல்வி மட்டமோ மிக  மிக  குறைவானது.இவரது ஒன்பதாவது வயதில் இவர் பள்ளியில்  சேர்க்கப்பட்ட  போது இவர் மிக மிக சாதாரண  மாணவன் தான். " விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்ற பழமொழி இவரிடம் பொய்த்துப்  போனது. இவரது தனிப்பட்ட வாழ்க்கையும்       கசப்புகளின், கஷ்டங்களின் மத்தியில் தான் அமைந்தது. இவரது பத்தொன்பதாவது வயதிலேயே எட்டு வயது மூத்த பெண்ணான ஆணி ஹாத்தவே வை திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. தனது மகனையும் பதினோராவது  வயதிலேயே பறி கொடுத்தார். நிலைகொள்ளா தவிப்புடன் ஊரூராக சுற்றிய ஷேக்ஸ்பியர் நாடகக் குழு ஒன்றுடன் லண்டன் மாநகருக்கு  ஓடிச் சென்றார். 27 ஆவது வயதிலே எடுபிடி நாடகக்காரனாக அவரை அரவணைத்துக்கொண்ட லண்டன் மாநகரம் மூன்று ஆண்டுகளில் ஒரு மகா கவியை உலகிற்கு தந்தது. தனது முதல் காவியமான வீனஸ் அண்ட் அடோனிஸ் ஐ 1593 இல் சௌதம்டன்  பிரபுவுக்கு காணிக்கை ஆக்கி பெரும் புகழ் பெற்றார். "அந்த கூட்டுப் புழுவுக்குள் என்ன ஆற்றல் எப்படி மறைந்திருந்தது  என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்". எப்படியோ பெரும் பொக்கிசமொன்று பக்குவமாய் வெளி வந்து பரிமளித்தது.

மிகக் குறுகிய 20 ஆண்டுகளில் 37 நாடகங்களையும், இரு சிறு காவியங்களையும், சில தனிக் கவிதைகளையும் எழுதிக் குவித்தார். இங்கிலாந்து தான் தத்து எடுத்துக் கொண்ட மகனுக்காக பெருமைப் பட்டது, பாராட்டி மகிழ்ந்தது. 20 ஆண்டுகள் இடை விடாத பணியில் தளர்ச்சியுற்ற இம் மகா கவி நோய் வாய்ப் பட்டார். 1616 ஏப்ரல் 23 ம் நாள் 52 ம் வயதில் வாழ்வியல்  நாடகத்தின் முடிவைக் கண்டார். உலகின் நாடகக் கலைக்கான பலமான அத்திவாரம் எழுப்பப் பட்ட நாள் அது.